28 January 2010

ஒரு பேச்சுலரின் (சாப்பாட்டு) டைரி

எண்சாண் உடம்பில் வயிறே பிரதானம். சிரசே பிரதானம் என்பதெல்லாம் சும்மா. வயிறு தான் முக்கியம். நாம் எல்லோரும் உழைப்பது (ஏமாற்றுவது, திருடுவது, கொள்ளை அடிப்பது, பிச்சை எடுப்பது என எதைச் செய்தாலும் அது) சாப்பாட்டுக்குத்தான். தத்துவம் சொல்வது மாதிரி இருந்தாலும் உண்மை அதுதானே. சென்னையில் பேச்சுலராய் தனியாய் சுற்றும் போது தான் (ஜாலியாய் அல்ல, சாப்பாட்டுக்காக ஹோட்டல் ஹோட்டலாய் சுற்றுவது) முன்பு ஊரில் செய்த அட்டகாசங்கள் எல்லாம் மனசில் வந்து மனசாட்சியைக் குத்தும்.

சிறு வயதில், வீட்டில் எவ்வளவு கஷ்டம் இருந்த போதும், பணப் பிரச்னை இருந்த போதும் சாப்பாட்டுக்கு மட்டும் எந்தக் கவலையும் இருப்பதே கிடையாது. பதினைந்து ரூபாய் பொன்னி அரிசிதான் சாப்பாட்டுக்கு (அப்போதெல்லாம் அது விலை மிக அதிகம், இப்போதைய நாற்பது ரூபாய் அரிசிக்குச் சமம்). வேளா வேளைக்கு வக்கனையாக ருசியாக தட்டில் வந்து விழுந்து விடும். அதனால்தானோ என்னவோ கஷ்டமான சூழ்நிலைகளை மட்டும் என்றுமே உணர்ந்ததில்லை. ஸ்கூல், வீடு, காலேஜ் என்று சந்தோஷமாக இருந்தாயிற்று.

டிபன் என்ன? உப்புமாவா? உப்புமாவை எவன் திம்பான்... உப்புமா இல்லடா, கார தோசை. கார தோசையா? கார தோசையை எவன் திம்பான்... என்று திமிரெடுத்துச் சுற்றிய காலம் அது. தட்டில் போட்ட சாப்பாட்டை, எனக்கு பிடிக்காது, சாப்பிட மாட்டேன் என்று விசிறி அடிக்கும் அளவுக்கெல்லாம் அராஜகம் செய்ததில்லை என்றாலும் முனகிக் கொண்டே சாப்பிடுவது, அடம் பிடிப்பது எனச் செய்வதுண்டு. எப்படித்தான் ஞாபகம் வைத்திருப்பார்களோ தெரியாது அதற்குப் பிறகு அந்தந்த டிஷ்களை செய்யவே மாட்டார்கள். கார்த்திக்கு இது பிடிக்காது, பப்பிக்கு அது பிடிக்காது என்று மனப்பாடமாக இருக்கும் அம்மாவுக்கு.

பிடித்த டிஷ்ஷூம் வேண்டும், ருசியாகவும் இருக்க வேண்டும், நேரத்துக்கு கிடைக்க வேண்டும் என்று தின்ற நாக்கு இப்போது நல்ல சோறு கிடைக்காதா என்று அலைகிறது. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் தட்டில் சாப்பாடு போட்டு சாம்பார், ரசம் ஊற்றி அப்பளத்துடன் பொரியல் போட்டுத்தின்பது எப்படி என்று மறந்தே போய்விட்டது. வீட்டில் இருக்கும் போது சாப்பிடாது விட்ட உப்புமா வகையறாக்கள் எல்லாம் அமிர்தம் என்று சோத்துக்கு அலையும் போதுதான் மனதில் உறைக்கிறது. கஷ்டத்திலும் நன்றாக சாப்பிட்டோம். ஆனால், நன்றாக சம்பாதிக்கும் போது சாப்பிட முடியவில்லை. (இதாண்ணே வாழ்க்கை)

அதுவும் சென்னை வந்த புதிதில் (நான் - வெஜ் பழகாதவர்களுக்கு ரொம்பக் கஷ்டம்) ஒன்றுமே செய்ய முடியாது. கிடைத்ததைத் தின்பது என்பார்களே அது தான் கதை. அதுவும் வேலை நிமித்தம் அகால நேரத்தில் ஆபீஸிலோ, மழையிலோ மாட்டிக் கொண்டால் போச்சு, அவ்வளவுதான். அன்றைய சாப்பாட்டில் மண் தான். பட்டினி அல்லது மண் மாதிரி இருக்கும் எதையாவது தான் தின்றாக வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டே வேளை.

இதில் சாப்பிடுவது உடம்புக்கு கெடுதல் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். (கூட இருக்கும் எவனுக்காவது அல்சர் வந்து தொலையும், அம்மை போடும், டயரியா வரும், இல்லாவிட்டால் சாப்பிட்டது சேரவில்லை என்று எவனாவது ஒருத்தன் சொரிந்து கொண்டே இருப்பான்) பர்ஸூக்கும் ெடுதல் வரக் கூடாது. நல்ல ஹோட்டலையும் கண்டுபிடிக்க வேண்டும். எத்தனை பிரச்னை.

அது மட்டுமல்ல... எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்பது போல எத்தனை வகை ஹோட்டல் வைத்தாய் இறைவா என்று அவனைக் கைகூப்பி வணங்கலாம். கையேந்தி பவன், தள்ளு வண்டி, ரோட்டுக் கடை, த்ரீ ஸ்டார், ஃபைவ் ஸ்டார், பிரியாணி ஹோட்டல், ஐயர் மெஸ், ஆந்திரா மெஸ், கொல்கத்தா மெஸ், சைனீஸ், இத்தாலியன், தந்தூரி, கான்டினென்டல், தாலி ஹவுஸ், போஜன்சாலா, இந்திய உணவுக் கழகம், போஸ்ட் ஆபீஸ் கேன்டீன், முனியாண்டி விலாஸ், தலப்பா கட்டு, அஞ்சப்பர், சரவண பவன், பஞ்சாபி தாபா என்று எத்தனை வகை. ஆனால் எதிலுமே ரெகுலராகச் சாப்பிட முடியாது. காசு முதல் குவாலிட்டி வரை பல காரணிகள்.

எந்த ஹோட்டலிலும் கிச்சனை மட்டும் எட்டிப் பார்த்து விடக் கூடாது. பார்த்தால் சாப்பிட முடியாது. 'என்னடா டேய்... ஹோட்டலில் கிடைக்காத ருசியா? வெரைட்டியா? அதைப்போய் இப்படிப் பழிக்கிறாயே' என்று சொல்லும் வீட்டுச் சாப்பாடு சாப்பிடும் அன்பர்களே, குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு தொடர்ச்சியாக மூன்று வேளை ஹோட்டல்கள் மாற்றி மாற்றி சாப்பிட்டுப் பாருங்கள். அப்போது தெரியும் உங்களுக்கு. கிடைப்பதைச் சாப்பிட்டு விட்டு ஃபுரூட் ஜூஸ், லெமன் ஜூஸ், வாழைப்பழம், மோர், பெப்ஸி, சோடா என எதையாவது உள்ளே தள்ளி சாப்பிட்ட அயிட்டத்தை செரிக்க வைக்க வேண்டும். கூடவே உடம்பு சூடாகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து உடம்பை ஊற வைப்பது என்ற கதையே இங்கு நடக்காது. ஆபீஸ் இருக்கும், அல்லது அன்றைக்குத்தான் மீட்டிங்கோ, க்ளையண்ட் அப்பாயிண்ட்மென்டோ இருக்கும்.

கண்டதைச் சாப்பிட்டு விட்டு உடம்புக்கு எதாவது, குறிப்பாக வெயில் வியாதிகள் (அம்மை, டயரியா, உட்காருமிடத்தில் கட்டி, மெட்ராஸ் ஐ, முகத்தில் கொப்புளங்கள் அல்லது வீக்கம் போன்றவை) வந்து தொலைத்தால் காலி. அவ்வளவு தான். ஆபீஸூக்கு போனைப் போட்டு சிக் லீவ் சொல்லிவிட்டு, முனகிக் கொண்டே ஊருக்கு ரயிலேற வேண்டியது தான். அதனால் பார்த்துச் சாப்பிட வேண்டும்.

அதிலும் ஹோட்டல்களில் இந்த டிப்ஸ் கருமம் வேறு. டிப்ஸ் வைக்கவில்லையென்றால் கெட்ட வார்த்தையிலேயே திட்டுகிறான்கள். வேளைக்கு மூன்று ரூபாய் டிப்ஸ் வைத்தாலும் ஆவரேஜாக மாதம் முந்நூறு ரூபாய் அதற்கே போகும். அநியாயமாக இல்லை..?

அந்த டிப்ஸ் பணத்தில் என்னென்ன செலவு செய்யலாம்? சத்யத்தில் ஜோடியாக ஒரு படம் பார்க்கலாம், அல்லது நல்லதாய் நாலு புத்தகம் வாங்கலாம், அல்லது பன்னிரண்டு லிட்டர் கூல்டிரிங்க் வாங்கலாம், அல்லது மூன்று டிரெயின் பாஸ் எடுக்கலாம், அல்லது இரண்டு பஸ் பாஸ் எடுக்கலாம், அல்லது 20 இங்கிலீஷ் பட டிவிடி வாங்கலாம், அல்லது சரவணா ஸ்டோர்ஸில் சீப்பாக ரெண்டு டி.ஷர்ட் எடுக்கலாம், அல்லது மாசக்கடைசியில் நாலு நாள் சிக்கனமாகச் சாப்பிட்டுச் சமாளிக்கலாம்.

வீட்டில் இருந்தால் வேளைக்கு 8 தோசை அல்லது 17 இட்லி அல்லது 10 சப்பாத்தி அல்லது 30 பணியாரம் அல்லது சாம்பார், குழம்பு, ரசம், தயிர், மோர், கூட்டு, கீரையோடு, ஒரு ஃபுல் அன்லிமிடெட் மீல்ஸ் சாப்பிடும் சாப்பிடும் வஞ்சனையில்லாத வயிறு எங்களுடையது. ஹோட்டலில் போய் உட்கார்ந்து தோசை வைக்கச் சொல்லி விட்டு விலையைக் கேட்டால் 25 ரூபாய் என்பான், அடுத்த தோசை சொல்ல மனம் வருமா உங்களுக்கு? சரவணா பவன் ஃபுல் மீல்ஸ் விலை என்ன தெரியுமா? 120 ரூபாய் மக்களே! நூத்தி இருபது ரூபாய். இப்படிச் சாப்பிட்டால் மத்தியானமும், ராத்திரியும் சாப்பிட காசு வேண்டாமா? கணக்குப் போட்டு லிமிட்டாகத் தான் தின்ன முடியும். மூன்று வேளைக்கும் இப்படித் தின்றால் எப்படி எடை போடுவது? பிப்டி கேஜி தாஜ்மஹால்தான் இன்னமும்.

செலவைக் குறைக்க வேண்டுமென்றால் ரூமில் சமையல் செய்து சாப்பிடலாமே? உடம்புக்கும் கெடுதல் இல்லையே என்று சொல்லும் அட்வைஸ் ஆறுமுகங்களே! வாங்கய்யா வாங்க, உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். கையில் சிக்கினால் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு நீங்கள் தான். நான் சொல்லும் கணக்கு வழக்குகளையெல்லாம் கொஞ்சம் பாருங்கள், பிறகு வருவீர்கள் அட்வைஸ் செய்ய...

முதலில் இதே செல்ஃப் குக்கிங் ஐடியாவுடன் நான்கைந்து பேர் சேர வேண்டும், பிறகு குறைந்தபட்சம் இரு அறைகள் உள்ள வீடு பார்க்க வேண்டும் (வீட்டு வாடகை, பத்து மாத அட்வான்ஸைக் கணக்கில் சேர்க்கவும்) மண்ணெண்ணெய் அடுப்பா, எலக்ட்ரிக் அடுப்பா, கேஸ் அடுப்பா என முடிவு செய்ய வேண்டும், கேஸ் தான் சரி என்றால் கேஸ் கனெக்ஷன் வாங்க வேண்டும். இரண்டு, மூன்று மாதங்களுக்கொருமுறை அட்டென்டன்ஸ் மாறும் ரூமில் யார் பெயரில் கேஸ் கனெக்ஷன வாங்குவது?

இன்றிருப்பவன் மூன்று மாதம் கழித்து இருக்க மாட்டான். வேறு ஊருக்கோ, ஏன் வேறு நாட்டுக்கோ கூடப் போயிருப்பான். அரிசி, பருப்பு, மிளகாய், புளி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தவிர மிக்ஸி, குக்கர், கிரைண்டர், வாணலி, பாத்திர பண்டங்கள் போன்ற மிகமிக இன்றியமையாத பொருட்களை வாங்கியாக வேண்டும். யார் கணக்கில், யார் பெயரில்? எல்லாவற்றுக்கும் மேல் யார் சமைப்பது? நைட் ஷிப்டு ஒருவன், ஈவினிங் ஷிப்டு ஒருவன், டே ஷிப்டு ஒருவன், வேலையே இல்லாமல் இன்னொருத்தன் என்றிருந்தால்?

அடுத்தது... யார் பாத்திரம் கழுவுவது, யார் உதவி செய்வது, எத்தனை பேருக்கான சமையல்? எத்தனை வேளைக்கு? இதையெல்லாம் கணக்குப் போட வேண்டும். அதற்கப்புறம் டேஸ்ட்டு? டேஸ்ட்டா? அப்படி என்றால்? இருக்கும் எல்லாவற்றையும்
கொட்டிச்சமைத்து விட்டு வேலை முடிந்ததும் தான் புது டிஷ்ஷூக்கு பெயர் சூட்டுவிழாவே நடக்கும். சூடு ஆறும் முன் உள்ளே தள்ள வேண்டும். இல்லாவிட்டால் கஷ்டம்.

மாதம் பத்து நாள் வெளியூர் மீட்டிங் போகிறவன், பதினைந்து நாள் ஊருக்குப் போகிறவன், முப்பது நாளும் மூச்சு விடாமல் சாப்பிடுகிறவன் என்று வெரைட்டி காட்டும் கேரக்டர்கள் இருக்கும் அறையில் ஒவ்வொருவர் சாப்பிட்ட நாள் கணக்கு
மாறினால், மாதம் முடிந்ததும் செலவை எப்படிப் பிரிப்பது? பிரணாப் முகர்ஜி பட்ஜெட் போட எடுத்துக் கொண்ட சிரத்தையை விட சற்று அதிகம் கவனம் தேவை இவற்றை கணக்குப் போட்டு சிக்கெடுக்க. கணக்குப் போடுவதற்குள் திக்கித் திணறி மூச்சு
முட்டிப் போகும். (இந்தக் கணக்கோடு சோப்பு, சீப்பு, பேஸ்டு, பர்ஃபூம், டாய்லெட் க்ளீனிங், ஷூ பாலீஸ், நியூஸ் பேப்பர், இத்யாதி, இத்யாதி காமன் செலவுக் கணக்குகளை கூட்டிக் கொள்ளல் வேண்டும்)

இந்தச் சாப்பாட்டில் சைவம் அசைவம் பிரச்சினை வேறு... சைவக்காரன் படுத்தும் பாடு தனியென்றால், அசைவக்காரன் செய்யும் அட்டகாசம் ஸ்பெஷல் வகை. அசைவத்தில் ஈரல் எனக்குப் பிடிக்காது, பீஃப் அவனுக்குப் பிடிக்காது, சிக்கன் சூடு ஏற்றும்,
மீன் முள் தொண்டையில் குத்தும் என்று ஆயிரத்தெட்டு பிரச்னை வரும். சரி சைவமே தின்று தொலையலாம் என்றால் ஒரு முறை வெறும் ரசம் சாதமும், முட்டை பொறியலும் செய்ய முயற்சித்து ஆரம்பத்திலேயே கேஸ் காலி. பாதி வெந்த சோறுடன்
குக்கரையும், அடித்து வைத்த முட்டையையும், கரைத்து வைத்த ரசம் கரைசலையும் தூக்கிக் கொண்டு எங்கே ஓட?

ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்றரை மணிக்கு கேஸ் கிடைக்குமா? குறைந்த பட்சம் மண்ணெண்ணெய்? அப்படியே மண்ணெண்ணெய் கிடைத்தாலும் அடுப்பு கிடைக்குமா? அல்லது அக்கம் பக்கத்தில் குடும்பத்துடன் ஓய்வெடுக்கும் மக்களிடம் "மம்மீமீ... டாடீடீ.." என்று தட்டைத் தூக்கிக் கொண்டு போய் நிற்க முடியுமா? கொஞ்சம் யோசிங்க அய்யா யோசிங்க. உங்க வீட்டம்மா வேளை தவறாமல் தட்டில் போட்டுக் கொண்டு வந்து தருகிறாள் அல்லவா? தின்று விட்டுப் பேசுவீர்கள் வியாக்யானம்...

இந்தக் கருமத்தையெல்லாம் யோசித்துத் தான் பல பேர் மேன்ஷன்களில், சேவல் பண்ணைகளில் தஞ்சம் புகுவது. தங்குமிடம் எவ்வளவு கேவலமாக இருந்தாலும் வேளா வேளைக்குச் சோறு நிச்சயம். ஆக இப்படியெல்லாம் திண்டாடி விட்டு... கடைசியில் என்ன செய்ய? மாதமொருமுறை ஊருக்கு ஓடிப்போய் காலாட்டிக்கொண்டே, டி.வி பார்த்துக் கொண்டே, திட்டு வாங்கிக் கொண்டே வெரைட்டியாய் மூன்று நாளைக்கு முக்கி முக்கித் தின்று விட்டு வருவோம்.

ஆகவே இளைஞர் பெருமக்களே! நான் சொல்ல வருவது என்னவென்றால்...

என்னவென்றால்...

என்னவென்றால்...

ஒரு வெங்காயமும் இல்லை, படிச்சு முடிச்சாச்சில்ல... போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க.

உங்களுக்கு விளக்கம் சொல்லியே என் எனர்ஜி வீணாய்ப் போயிடும் போலிருக்கு. பேசிப் பேசி டயர்டாகிடுச்சு. போய் சாப்பிட்டுட்டு வர்றேன்... அப்புறம் பார்க்கலாம், என்ன..?


7 comments:

DHANS said...

am staying inchennai for 5 years and we are 5 guys in my apartment now.

we appointed a maid for cooking and cleaning. we never had any problem with sharing and cooking.


8500 rent, for maid 2500 and for grocerries 2000 and other expenaces 2000 total 15000 and for 5 guys it will come 3000 per head.

better than mansion life. if someone leaves the home we will find one more person. i have seen almost 15 guys in this 5 years and we still rocking..
homely food, no damage no extra expense and feels like home

KARTHIK said...

ரொம்ப நொந்துபோயி இருப்பியாட்டா தெரியுதா

கம்முனு பேசாம வேணாம் பேசிட்டே ஒரு கலியாணத்த பண்ணிப்போடு

அப்புறம் தெனுமும் கலி கஞ்சிதான் :-))

ஆரூரன் விசுவநாதன் said...

//Blogger கார்த்திக் said...

ரொம்ப நொந்துபோயி இருப்பியாட்டா தெரியுதா

கம்முனு பேசாம வேணாம் பேசிட்டே ஒரு கலியாணத்த பண்ணிப்போடு

அப்புறம் தெனுமும் கலி கஞ்சிதான் :-))//


அதானே....ஏப்பு......ஒரு கலியாணத்த பண்டிக்க வேண்டியதுதானே.
மாடு மேச்சா மதரயுமாயிரும் மச்சானுக்கு பொன்னுப் பார்த்தா மாதரயும் ஆயிருமுல்லோ...

sivashankar said...

thambi yenappa appadi vela paakkira. etho namma ooru pakkam yethavathu college ku ponama naalu pasanga valkaiya nasamakkunama nu illama

ASHOK said...

anna ena ithu??? but ur weight is til increasing only not decreasing... Y???

பிரேமா மகள் said...

இதுக்குத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க

பிரதீபா said...

கலியாணம் ஆச்சு, சோத்து பிரச்சனையோட இன்னும் என்னென்னவெல்லாம் சேருதோ !! (சும்மா தமாசுக்கு )